3231
பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும் 

பொருள்அரு ளனுபவம் அதற்குப்
பத்தியம் உயிரின் அனுபவம் இதனைப் 

பற்றறப் பற்றுதி இதுவே
சத்தியம் எனஎன் தனக்கருள் புரிந்த 

தனிப்பெருங் கருணைஎன் புகல்வேன்
முத்தியற் சிவிகை இவர்ந்தருள் நெறியின் 

முதலர சியற்றிய துரையே   
3232
அடியெனல் எதுவோ முடியெனல் எதுவோ 

அருட்சிவ மதற்கெனப் பலகால்
படியுற வருந்தி இருந்தஎன் வருத்தம் 

பார்த்தரு ளால்எழுந் தருளி

மிடியற எனைத்தான் கடைக்கணித் துனக்குள் 

விளங்குவ அடிமுடி என்றாய்
வடிவிலாக் கருணை வாரியே மூன்று 

வயதினில் அருள்பெற்ற மணியே   
3233
செவ்வகை ஒருகால் படுமதி அளவே 

செறிபொறி மனம்அதன் முடிவில்
எவ்வகை நிலையும் தோற்றும்நீ நினக்குள் 

எண்ணிய படிஎலாம் எய்தும்
இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன் 

றெனக்கருள் புரிந்தசற் குருவே
தெவ்வகை அமண இருளற எழுந்த 

தீபமே சம்பந்தத் தேவே   
3234
முன்புறு நிலையும் பின்புறு நிலையும் 

முன்னிநின் றுளமயக் குறுங்கால்
அன்புறு நிலையால் திருநெறித் தமிழ்கொண் 

டையநீத் தருளிய அரசே
என்புபெண் ணுருவோ டின்னுயி ரதுகொண் 

டெழுந்திடப் புரிந்துல கெல்லாம்
இன்புறப் புரிந்த மறைத்தனிக் கொழுந்தே 

என்னுயிர்க் குயிர்எனுங் குருவே   
3235
வருபகற் கற்பம் பலமுயன் றாலும் 

வரலருந் திறனெலாம் எனக்கே
ஒருபகற் பொழுதில் உறஅளித் தனைநின் 

உறுபெருங் கருணைஎன் உரைப்பேன்
பெருமண நல்லூர்த் திருமணங் காணப் 

பெற்றவர் தமையெலாம் ஞான
உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த 

உயர்தனிக் கவுணிய மணியே   


பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்