3236
சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே

தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே

கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்

இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்

பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே()   

 இஃதோர் தனிப்பாடல் இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொவே பதிப்பித்துள்ளார்

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 ஆளுடைய அரசுகள் அருண்மாலை 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3237
திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும்

சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை
உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ

ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப்
பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட

புண்ணியனே நண்ணியசீர்ப் புனித னேஎன்
கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக்

கடலேநின் கழல்கருதக் கருது வாயே   
3238
வாய்மையிலாச் சமணாதர் பலகாற் செய்த

வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித்
தூய்மைபெறும் சிவநெறியே விளங்க ஓங்கும்

சோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச்
சேய்மைவிடா தணிமையிடத் தாள வந்த

செல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள்
ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ

அணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே   
3239
தேவரெலாம் தொழுந்தலைமைத் தேவர் பாதத்

திருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற
நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான

நாயகனே நல்லவர்க்கு நண்ப னேஎம்
பாவமெலாம் அகற்றிஅருட் பான்மை நல்கும்

பண்புடைய பெருமானே பணிந்து நின்பால்
மேவவிருப் புறும்அடியர்க் கன்பு செய்ய

வேண்டினேன் அவ்வகைநீ விதித்தி டாயே   
3240
விதிவிலக்கீ தென்றறியும் விளைவொன் றில்லா

வினையினேன் எனினும்என்னை விரும்பி என்னுள்
மதிவிளக்கை ஏற்றிஅருள் மனையின் ஞான

வாழ்வடையச் செயல்வேண்டும் வள்ள லேநற்
பதிமலர்த்தாள் நிழலடைந்த தவத்தோர்க் கெல்லாம்

பதியேசொல் லரசெனும்பேர் படைத்த தேவே
கதிதருகற் பகமேமுக் கனியே ஞானக்

கடலேஎன் கருத்தேஎன் கண்ணு ளானே