3241
கண்ணுளே விளங்குகின்ற மணியே சைவக்

கனியேநா வரசேசெங் கரும்பே வேதப்
பண்ணுளே விளைந்தஅருட் பயனே உண்மைப்

பதியோங்கு நிதியேநின் பாதம் அன்றி
விண்ணுளே அடைகின்ற போகம் ஒன்றும்

விரும்பேன்என் றனையாள வேண்டுங் கண்டாய்
ஒண்ணுளே ஒன்பதுவாய் வைத்தாய் என்ற

உத்தமனே() சித்தமகிழ்ந் துதவு வோனே   

 எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ

எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்
கண்ணிலேன் மற்றோர்க ளைகண்இல்லேன்

கழலடியே கைதொழுது காணின்அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல்வைத்

தாய்ஒக்க அடைக்கும்போ துணரமாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணியனே
 (--) திருநாவுக்கரசர், திருப்புகலூர்த் திருத்தாண்டகம்

3242
ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்

ஓர்கிலேன் சிறியேன்இவ் வுலக வாழ்வில்
ஆங்காரப் பெருமதமால் யானை போல

அகம்பாவ மயனாகி அலைகின் றேன்உன்
பாங்காய மெய்யடியர் தம்மைச் சற்றும்

பரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ 
தீங்காய செயலனைத்தும் உடையேன் என்ன

செய்வேன்சொல் லரசேஎன் செய்கு வேனே   
3243
செய்வகைஒன் றறியாத சிறியேன் இந்தச்

சிற்றுலக வாழ்க்கையிடைச் சிக்கி அந்தோ
பொய்வகையே புரிகின்றேன் புண்ணி யாநின்

பொன்னடியைப் போற்றிலேன் புனித னேநான்
உய்வகைஎவ் வகையாது செய்வேன் நீயே

உறுதுணைஎன் றிருக்கின்றேன் உணர்வி லேனை
மெய்வகையிற் செலுத்தநினைத் திடுதி யோசொல்

வேந்தேஎன் உயிர்த்துணையாய் விளங்குங் கோவே   
3244
விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி

மேவியமெய்ப் பொருளை உள்ளே விரும்பி வைத்துக்
களங்கறுமெய் யன்பரெல்லாங் களிப்ப அன்றோர்

கற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து
துளங்குபெருஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத்

துணையேநந் துரையேநற் சுகமே என்றும்
வளங்கெழும்ஆ கமநெறியை வளர்க்க வந்த

வள்ளலே நின்னருளை வழங்கு வாயே   
3245
அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின்

அவதரித்த மணியேசொல் லரசே ஞானத்
தெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த

செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை
இருள்வழங்கும் உலகியல்நின் றெடுத்து ஞான

இன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ
மருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும்

வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே