3246
தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் தூறும்

செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை
சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம்

தந்தபெருந் தகையேஎம் தந்தை யேஉள்
கூர்ந்தமதி நிறைவேஎன் குருவே எங்கள்

குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம்
தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத

செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 ஆளுடைய நம்பிகள் அருண்மாலை 
கொச்சகக் கலிப்பா
3247
மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத்
துதியணிசெஞ் சுவைப்பொருளில் சொன்மாலை தொடுத்தருளி
விதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும்
வதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே   
3248
நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச்
சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் தனைஆளாய்
ஏற்றிலிட்ட திருவடியை எண்ணிஅரும் பொன்னையெலாம்
ஆற்றில்இட்டுக் குளத்தெடுத்த அருட்டலைமைப் பெருந்தகையே   
3249
இலைக்குளநீ ரழைத்ததனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த்
தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின்
கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர்பொன்
மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே   
3250
வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை
ஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான்
பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த
மாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே