3251
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
ஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே  

 ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகி
மாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதிகில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே

-  (--) சுந்தரர், திருவாரூர்ப்பதிகம்

3252
வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும்
தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்
கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே   
3253
தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்() தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே   

 திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக்காப்பு என்பதும், 
திருநாவுக்கரசர் தேவாரத்தைத் தேவாரம் என்பதும், சுந்தரமூர்த்திகள் தேவாரத்தைத் 
திருப்பாட்டு என்பதும் ஒருவகை வழக்கு
3254
இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான்
உன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என்
றென்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம்
அன்பாட்டுக் கிசைவதுகாண் அருட்பாட்டுப் பெருந்தகையே   
3255
பரம்பரமாம் துரியமெனும் பதத்திருந்த பரம்பொருளை
உரம்பெறத்தோ ழமைகொண்ட உன்பெருமை தனைமதித்து
வரம்பெறநற் றெய்வமெலாம் வந்திக்கும் என்றால்என்
தரம்பெறஎன் புகல்வேன்நான் தனித்தலைமைப் பெருந்தகையே