3261
தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்
ஆடுகின்ற சேவடிக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே
நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே   
3262
சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே   
3263
வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே   
3264
வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்
தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே  
3265
பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்
எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி
மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால்
புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே