3271
வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா

வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்

இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்

அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்   
3272
சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்

தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி
நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி

நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்
பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்

பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்
சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்   
3273
இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக

இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்

சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்

ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்   
3274
எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்

எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்

துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்

மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்   
3275
அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்

அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை

மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்

துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்