3276
அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்

ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்

கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்

கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்   
3277
பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்

பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்

இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்

நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்   
3278
இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்

இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்
பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்

பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்
விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி

விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்
உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்   
3279
ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்

அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்
பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்

பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ
டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்

இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த
ஊற்றமதாம் சமரசஆ னந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்   
3280
வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்

வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே

புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்

விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி
உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்