3281
இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்

ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்

திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்

மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்   
3282
ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்

உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்

ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்

யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்  
 

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 ஆற்றாமை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3283
எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார்

ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன் 
புன்மையேன் புலைத்தொழிற்கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன்

மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே   
3284
கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன் 

கலகர்தம் உறவினிற் களித்தேன்
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் 

உலகியற் போகமே உவந்தேன்
செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் 

தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன்
குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே  
3285
கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் 

கண்மனக் குரங்கனேன் கடையேன்
நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் 

நீசனேன் பாசமே உடையேன்
நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த 

நச்சுமா மரம்எனக்கிளைத்தேன்
கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே