3286
நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார் 

நெருக்கிலும்பெருக்கிய நினைப்பேன்
புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப் 

போக்கிவீண் போதுபோக் குறுவேன்
நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய 

நாயினுங் கடையனேன் நவையேன்
குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே   
3287
செடிமுடிந் தலையும்மனத்தினேன் துன்பச் 

செல்லினால்அரிப்புண்டசிறியேன்
அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன் 

அறிந்தவர் தங்களை அடையேன்
படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர்

பணத்திலும் கொடியனேன் வஞ்சக்
கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே   
3288
அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும் 

அறக்கடை யவரினுங் கடையேன்
இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன் 

இயலுறு நாசியுட் கிளைத்த
சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன் 

சிறுநெறிச் சழக்கையே சிலுகுக்
குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே   
3289
வாட்டமே உடையார் தங்களைக் காணின் 

மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் 

கூற்றினும் கொடியனேன் மாயை
ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் 

அச்சமும் அவலமும் இயற்றும்
கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே   
3290
கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன் 

கறிக்குழல் நாயினும் கடையேன்
விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய் 

விளம்புறும் வீணனேன் அசுத்தப்
புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் 

பொங்கிய மனத்தினேன் பொல்லாக்
கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே