3291
பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் 

பணம்பறித் துழல்கின்ற படிறேன்
எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை 

இயற்றுவேன் எட்டியே அனையேன்
மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் 

மாடெனத் திரிந்துழல் கின்றேன்
குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே   
3292
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் 

கள்வரில் கள்வனேன் காமப்
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் 

பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் 

தீயரில் தீயனேன் பாபக்
கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 பிறப்பவம் பொறாது பேதுறல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3293
குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்

குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்

வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா

நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்

நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே   
3294
விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது

விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்

அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்

கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ

கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே   
3295
அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்

அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன்
குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்

கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன்
செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்

சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன்
எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்

இதயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே