3301
இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்

இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை

புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த

நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே   
3302
காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்

களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்

நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்

அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 மாயைவலிக் கழுங்கல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3303
தாவு மான்எனக் குதித்துக்கொண் டோ டித்

தைய லார்முலைத் தடம்படுங் கடையேன்
கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும்

கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
ஓவு றாதுழல் ஈஎனப் பலகால்

ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
சாவு றாவகைக் கென்செயக் கடவேன்

தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே   
3304
போக மாதியை விழைந்தனன் வீணில்

பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
தேக மாதியைப் பெறமுயன் றறியேன்

சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்

காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
ஆக மாதிசொல் அறிவறி வேனோ

அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே   
3305
விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்

விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்

கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்

மாய மேபுரி பேயரில் பெரியேன்
பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்

பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே