3311
கான மேஉழல் விலங்கினிற் கடையேன்

காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்
மான மேலிடச் சாதியே மதமே

வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்
ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்

இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
ஞான மேவுதற் கென்செயக் கடவேன்

நாய காஎனை நயந்துகொண் டருளே   
3312
இருளை யேஒளி எனமதித் திருந்தேன்

இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
மருளை யேதரு மனக்குரங் கோடும்

வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்

பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
அருளை மேவுதற் கென்செயக் கடவேன்

அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 முறையீடு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3313
மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்

மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்

செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்

எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே   
3314
அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்

அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்

நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்

மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே   
3315
கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த

கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்

நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்

திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே