3316
தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்

சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்

உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே

அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே  
3317
வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்

மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்

நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான

பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே   
3318
கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்

கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்

கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்

மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே   
3319
சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்

சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்

ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்

நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே   
3320
சாகாத தலைஅறியேன் வேகாத காலின்

தரம்அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்

அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்

மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
ஏகாய உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே   
  ஏகம் - முத்தி, ஈறுதொக்கு நின்றது, முதற்பதிப்பு