3321
தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்

சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை

அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே

தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே   
3322
வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்

மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே

தௌ;ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே

ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 அடியார் பேறு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3323
அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே  
3324
பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே   
3325
பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான்
ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ
மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும்
ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே