3326
மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே
இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே   
3327
முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய
உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே
மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்
கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ  
3328
அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்
செங்கேழ் இதழிச் சடைக்கனியே சிவமே அடிமைச் சிறுநாயேன்
எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே   
  செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ சு; பி இரா பாடம் 
3329
அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே   
3330
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே