3331
பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக்
கதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப
திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே   
3332
வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ   
3333
கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான்
அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன்
கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச்
சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ   
3334
படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக்
கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே
பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன்
அடிமேல் ஆசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே   
3335
நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும்
ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய
தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல்
மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே