3336
நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே
வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற
பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே  
3337
இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்
வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன்
அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத்
துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே   
3338
எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ
அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன்
சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ
முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே   
3339
எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ
அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை
இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்
பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே   
  என்செய்கேன் - ச மு க பதிப்பு
 பரஞ்சுடரே - படிவேறுபாடு ஆ பா 
3340
அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந் திங்கே என்னளவில்
கொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப் படுமோ குணக்குன்றே
தடுக்குந் தடையும் வேறில்லை தமியேன் தனைஇத் தாழ்வகற்றி
எடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ இன்னும் இரங்கிலையே