3346
புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து 

பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த 

தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில் 

உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன் 

என்னினும் காத்தருள் எனையே   
3347
கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன் 

கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த 

கடையனேன் கங்குலும் பகலும்
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை 

அறவுண்டு குப்பைமேற் போட்ட
நெட்டிலை அனையேன் என்னினும் வேறு 

நினைத்திடேல் காத்தருள் எனையே   
3348
நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் 

நெருக்கிய மனத்தினேன் வீணில்
போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் 

புனைகலை இலர்க்கொரு கலையில்
ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள 

உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்
ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் 

என்னினும் காத்தருள்எனையே   
3349
அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்

அசடனேன் அறிவிலேன்உலகில்
குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க் 

குழியிலே குளித்தவெங் கொடியேன்
வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க 

மனங்கொணட சிறியேனன் மாயைக்
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் 

என்னினும் காத்தருள் எனையே   
3350
தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத் 

துதித்திலேன் தூய்மைஒன் றறியேன்
கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில் 

கலந்துணக் கருதிய கருத்தேன்
பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த 

பாவியேன் தீமைகள் சிறிதும்
எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன் 

என்னினும் காத்தருள் எனையே