3351
வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை 

மனைகவர் கருத்தினேன் ஓட்டைச்
சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன் 

தயவிலேன் சூதெலாம் அடைத்த
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் 

பெரியவர் மனம்வெறுக் கச்செய்
எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன் 

என்னினும் காத்தருள் எனையே   
3352
உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந் 

தோதிய வறிஞருக் கேதும்
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில் 

குணம்பெரி துடையநல் லோரை
அடுத்திலேன் அடுத்தற் காசையும் இல்லேன் 

அவனிமேல் நல்லவன் எனப்பேர்
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன் 

றிருக்கின்றேன் காத்தருள் எனையே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 அவா அறுத்தல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3353
தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் 

தக்கமுப் போதினும் தனித்தே
சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் 

சிறியனேன் தவஞ்செய்வான் போலே
ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே 

நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
காலையா தியமுப் போதினும் சோற்றுக் 

கடன்முடித் திருந்தனன் எந்தாய்   
3354
சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் 

துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் 

றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் 

பொருந்திய காரசா ரஞ்சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை 

தங்கினேன் என்செய்வேன் எந்தாய்   
3355
விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி 

விளைவிலா தூண்எலாம் மறுத்த
கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக் 

கருத்துவந் துண்ணுதற் கமையேன்
நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் 

நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த
பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை 

பற்றினேன் என்செய்வேன் எந்தாய்