3356
உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் 

றொருவனை உரைப்பதோர் வியப்போ
குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் 

கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் 

கறியிலே கலந்தபே ராசை
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு 

வீங்கிட உண்டனன் எந்தாய்   
3357
கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த 

கீரையே விரும்பினேன் வெறுந்தண்
நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் 

நீரையே விரும்பினேன் உணவில்
ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் 

அய்யகோ அடிச்சிறு நாயேன்
பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் 

பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்   
3358
பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே 

பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை 

தகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் 

சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க 

வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்   
3359
உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த 

உண்டியே உண்டனன் பலகால்
கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன் 

கட்டிநல் தயிரிலே கலந்த
தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச் 

சம்பழச் சோற்றிலே தடித்தேன்
திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில் 

செருக்கினேன் என்செய்வேன் எந்தாய்   
3360
மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் 

விருப்பெலாம் வைத்தனன்உதவாச் 
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த 

துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் 

எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை 

கொண்டனன் என்செய்வேன்எந்தாய்