3361
தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் 

தவறவிட் டிடுவதற் கமையேன்
கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் 

கொட்டினேன் குணமிலாக் கொடியேன்
வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப 

மலங்கொட்ட ஓடிய புலையேன்
பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த 

பாவியேன் என்செய்வேன் எந்தாய்   
3362
வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி

வைத்தலே துவட்டலில் சுவைகள்
உறுத்தலே முதலா உற்றபல் உணவை 

ஒருமல வயிற்றுப்பை உள்ளே
துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன்

துணிந்தரைக் கணத்தும்வன் பசியைப் 
பொறுத்தலே அறியேன் மலப்புலைக் கூட்டைப்

பொறுத்தனன் என்செய்வேன் எந்தாய்   
3363
பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் 

பண்ணிய பண்ணிகா ரங்கள்
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் 

ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய 

கடையரில் கடையனேன் உதவாத்
துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து 

தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்   
3364
அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் 

அடுக்கிய இடந்தொறும் அலைந்தே
தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் 

தவம்புரிந் தான்என நடித்தேன்
பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் 

பொங்கினேன் அய்யகோ எனது
முடிக்கடி புனைய முயன்றிலேன் அறிவில்

மூடனேன் என்செய்வேன் எந்தாய்   
3365
உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை 

உடையவா அடியனேன் உனையே
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் 

அப்பநின் ஆணைநின் தனக்கே
தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் 

தூயனே துணைநினை அல்லால்
கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் 

கைவிடேல் கைவிடேல் எந்தாய்   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 தற் சுதந்தரம் இன்மை 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்