3376
திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்

திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான

உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்

பொங்கிஅகம் புறங்காணா தெங்கு நிறைந்திடுமோ
அருத்தகும்அவ் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்

அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே  
3377
கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ

கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ

அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்

வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்

தனதுதிரு உளம்எதுவோ சற்றுமறிந் திலனே   
3378
நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ

ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ

புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ

வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்

பரமர்திரு உளம்எதுவோ பரமம்அறிந் திலனே   
3379
சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்

சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்

பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத

நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்

வள்ளல்குரு நாதர்திரு உள்ளம்அறி யேனே   
3380
களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்

கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ

வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ

குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ

ஸோதிதிரு உளம்எதுவோ ஏதும்அறிந் திலனே