3381
திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்

சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்

காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்

விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ

தடைபடுமோ திருஉளந்தான் சற்றும்அறிந் திலனே   
3382
ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே

அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
கானந்த மதத்தாலே காரமறை படுமோ

கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ

உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ

நல்லதிரு உளம்எதுவோ வல்லதறிந் திலனே  
3383
தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்

சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ

கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ

பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை

மறந்திடுமோ திருஉளத்தின் வண்ணம்அறிந் திலனே   
3384
தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்

செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன்
காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ

கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ

விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ
ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ

எப்படியோ திருஉளந்தான் ஏதும்அறிந் திலனே   
3385
ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே

நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ

உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ

இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ

ஐயர்திரு உளம்எதுவோ யாதுமறிந் திலனே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 பிள்ளைச் சிறு விண்ணப்பம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்