3386
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் 

தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் 

பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும் 

புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் 

அம்மைஅப் பாஇனி ஆற்றேன்  
3387
பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் 

பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற 

வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான்

குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ 

முனிவதென் முனிவுதீர்ந் தருளே   
3388
வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை 

விரும்பினும் அங்ஙனம் புரியச்
சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற 

தந்தைதாய் மகன்விருப் பாலே
இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ 

என்றனை விழைவிக்க விழைந்தேன்
செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் 

திருவுளம் அறியுமே எந்தாய்  
3389
பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் 

புல்முனை ஆயினும் பிறர்க்கு
நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் 

நண்ணிய கருணையால் பலவே
கைபிழை யாமை கருதுகின் றேன்நின் 

கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ 

திருவுளம் அறியுமே எந்தாய்   
3390
அப்பணி முடிஎன் அப்பனே மன்றில் 

ஆனந்த நடம்புரி அரசே
இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் 

டிந்தநாள் வரையும்என் தனக்கே
எப்பணி இட்டாய் அப்பணி அலதென் 

இச்சையால் புரிந்ததொன் றிலையே
செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் 

திருவுளம் அறியுமே எந்தாய்  
  அப்பணிசடை - ச மு க பதிப்பு