3391
முன்னொடு பின்னும் நீதரு மடவார் 

முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன் 

புணர்ப்பலால் என்புணர்ப் பலவே
என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே 

எந்தைவே றியம்புவ தென்னோ
சொன்னெடு வானத் தரம்பையர் எனினும் 

துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே   
3392
இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில் 

எய்துவித் திடுதியேல் அதுவுன்
தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும் 

சம்மதம் அன்றுநான் இதனைப்
பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப் 

பால்உணும் காலையே உளதால்
மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என் 

மதிப்பெலாம் திருவடி மலர்க்கே  
3393
அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே 

அருந்தலில் எனக்குள வெறுப்பைப்
பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி 

இன்றுநான் பேசுவ தென்னே
செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன் 

திருவருள் அமுதமே விழைந்தேன்
எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர் 

எட்டுணை யேனும்இன் றெந்தாய்   
3394
இன்சுவை உணவு பலபல எனக்கிங் 

கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன்
நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும் 

நீதரு வித்திடில் அதுநின்
தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும் 

சம்மதம் இல்லைநான் தானே
என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன் 

தேடிய தும்இலை ஈண்டே   
3395
செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை 

செய்திலேன் இந்தநாள் அன்றி
அறிவதில் லாத சிறுபரு வத்தும் 

அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல்
எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள் 

இருக்கின்ற நீ அறிந் ததுவே
பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப் 

பெற்றனன் பேசுவ தென்னே