3396
பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் 

படைத்தஅப் பணங்களைப் பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் 

கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை 

எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் 

கண்டனன் இனிச்சொல்வ தென்னே  
3397
கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும் 

கிளைத்திலேன் பசிஅற உணவு
திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன் 

இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
தளைத்திடு முடைஊன் உடம்பொரு சிறிதும் 

தடித்திட நினைத்திலேன் இன்றும்
இளைத்திட விழைகின் றேன்இது நான்தான் 

இயம்பல்என் நீஅறிந் ததுவே   
3398
இவ்வுல கதிலே இறைஅர சாட்சி 

இன்பத்தும் மற்றைஇன் பத்தும்
எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன் 

எண்ணுதோ றருவருக் கின்றேன்
அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர் 

அரிமுத லோர்அடை கின்ற
கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன் 

எந்தைஎன் கருத்தறிந் ததுவே   
3399
சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் 

சாற்றிடும் யோகமோர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது 

புந்தியில் ஆசைசற் றறியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை 

பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
உறியதோர் இச்சை எனக்கிலை என்றன்

உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்   
3400
இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான் 

இருக்கவும் ஆசைஇன் றினிநான்
பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம் 

பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள் 

செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து 

தூங்கவும் ஆசைஒன் றிலையே