3401
சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் 

தனித்தபே ரன்புமெய் அறிவும்
நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா 

நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொற்சபை நடமும் 

தினந்தொறும் பாடிநின் றாடித்
தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் 

செய்வதென் இச்சையாம் எந்தாய்  
3402
உருமலி உலகில் உன்னைநான் கலந்தே 

ஊழிதோ றூழியும் பிரியா
தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன் 

உன்னையே பாடி நின்றாடி
இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக் 

கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே
திருமணிப் பொதுவில் அன்புடை யவராச் 

செய்யவும் இச்சைகாண் எந்தாய்   
3403
எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே 

எண்ணிநல் இன்புறச் செயவும்
அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை 

அகற்றியே அச்சநீக் கிடவும்
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் 

சிவசிவ என்றுகூத் தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே 

ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்   
3404
உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி 

உன்அறி வடையும்நாள் வரையில்
இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான் 

எண்ணியும் நண்ணியும் பின்னர்
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே 

மெய்யுறக் கூடிநின் றுனையே
அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும் 

அடியனேற் கிச்சைகாண் எந்தாய்   
3405
திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும் 

சிதம்பரம் எனும்பெருங் கோயில்
உருவளர் மறையும் ஆகமக் கலையும் 

உரைத்தவா றியல்பெறப் புதுக்கி
மருவளர் மலரின் விளக்கிநின் மேனி 

வண்ணங்கண் டுளங்களித் திடவும்
கருவளர் உலகில் திருவிழாக் காட்சி 

காணவும் இச்சைகாண் எந்தாய்