3406
தங்கமே அனையார் கூடிய ஞான 

சமரச சுத்தசன் மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் 

சார்திருக் கோயில்கண் டிடவும்
துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி 

துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி 

ஆடவும் இச்சைகாண் எந்தாய்   
  சங்கம் சார்திருக்கோயில் - வடலூர் ஞானசபை ச  மு க 
3407
கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த 

கடுந்துயர் அச்சமா திகளைத்
தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் 

தரவும்வன் புலைகொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க 

உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை 

வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்   
3408
மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் 

வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் 

கணமும்நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் 

இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் 

நல்குதல் எனக்கிச்சை எந்தாய்   
3409
இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை 

எனக்கிலை இவைஎலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெருந்தயா நிதிநின் 

திருவுளத் தறிந்தது தானே
தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ 

தருதலே வேண்டும்இவ் விச்சை
நவைஇலா இச்சை எனஅறி விக்க 

அறிந்தனன் நவின்றனன் எந்தாய்   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 பிள்ளைப் பெரு விண்ணப்பம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3410
தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது 

தந்தையே திருச்சிற்றம் பலத்தே
கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன்

கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம்
இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே 

எனக்கருள் புரிகநீ விரைந்தே
இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் 

இணைமலர்ப் பொன்னடி ஆணை