3416
இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் 

இதயத்தில் எழுந்திருந் தருளி
விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு 

விளங்கிட விளக்கியுட் கலந்தே
கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் 

கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே 

அடைத்தருள் என்மொழி இதுவே   
3417
மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி 

மன்னிய வடிவளித் தறிஞர்
குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக் 

கொடுத்துளே விளங்குசற் குருவே
பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம் 

பலத்திலே அன்பர்தம் அறிவாம்
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது 

தந்தையே கேட்கஎன் மொழியே  
3418
விண்டபோ தகரும் அறிவரும் பொருளே 

மெய்யனே ஐயனே உலகில்
தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் 

சூழ்ந்தவர் உறவினர் தாயர்
கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் 

குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் 

கலங்கிய கலக்கம்நீ அறிவாய்  
3419
சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது 

தெய்வமே என்பெருஞ் சிறப்பே
ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் 

அடுத்தவர் உறவினர் நேயர்
வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால் 

மெய்யுளம் வெதும்பிய வெதுப்பைப்
பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் 

பதைத்ததுன் உளம்அறி யாதோ   
3420
பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் 

பரமனே அரும்பெரும் பொருளே
தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் 

சங்கடப் பாவியால் வருந்தி
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் 

நண்பன்என் றவரவர் குறைகள்
உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் 

உடைந்ததுன் உளம்அறி யாதோ