3421
அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் 

ஐயனே இவ்வுல கதிலே
பொன்னையே உடையார் வறியவர் மடவார் 

புகலும்ஆ டவர்இவர் களுக்குள்
தன்னையே அறியாப் பிணியினால் ஆவி 

தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த 

சோபத்தை நீஅறி யாயோ   
3422
உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் 

ஒருவனே சிற்சபை உடையாய்
விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி 

மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என் 

றொருவரோ டொருவர்தாம் பேசிக்
கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம் 

குலைநடுங் கியதறிந் திலையோ   
3423
காவிநேர் கண்ணாள் பங்கனே தலைமைக் 

கடவுளே சிற்சபை தனிலே
மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் 

வீதிஆ திகளிலே மனிதர்
ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத 

அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் 

பதைத்ததுன் உளம்அறி யாதோ   
  காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ சு பதிப்பு 
3424
நாதனே என்னை நம்பிய மாந்தர் 

ஞாலத்தில் பிணிபல அடைந்தே
ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன் 

எய்திய சோபமும் இளைப்பும்
ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் 

உற்றபேர் ஏக்கமா திகளும்
தீதனேன் இன்று நினைத்திட உள்ளம் 

திடுக்கிடல் நீஅறிந் திலையோ   
3425
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் 

கண்ணுதற் கடவுளே என்னைப்
பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர் 

பெருகிய பழக்கமிக் குடையோர்
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து 

மறைந்திட்ட தோறும்அப் பிரிவை
உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி 

உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்