3426
என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் 

எந்தையே என்றனைச் சூழ்ந்தே
நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை 

நாயினேன் கண்டுகேட் டுற்ற
அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் 

அளவிலை அளவிலை அறிவாய்
இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் 

எய்திடும் துயரும்நீ அறிவாய்  
3427
நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் 

நெறியலா நெறிகளில் சென்றே
கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் 

றயலவர் குறித்தபோ தெல்லாம்
உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே 

உற்றென நடுநடுக் குற்றே
துலைபுரிந் தோடிக் கண்களை மூடித் 

துயர்ந்ததும் நீஅறிந் ததுவே  
  தொலைபுரிந்து ஖ முதற்பதிப்பு, பொசு, சமுக 
3428
ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற 

ஒருவனே உலகியல் அதிலே
மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் 

வல்லொலி கேட்டபோ தெல்லாம்
காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் 

கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் 

என்னுளம் நடுங்குவ தியல்பே   
3429
மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை 

வள்ளலே உலகர சாள்வோர்
உறைமுடி வாள்கொண் டொருவரை ஒருவர் 

உயிரறச் செய்தனர் எனவே
தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் 

தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் 

என்னுளம் நடுங்குவ தியல்பே   
  உறைஉறு - முதற்பதிப்பு, பொசு, ச மு க  
3430
தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் 

தாய்க்குநால் என்பதை இரண்டாய்
வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் 

நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில் 

சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்

கலங்கினேன் அதுநினைத் தெந்தாய்