3431
எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே 

இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் 

பரதவிக் கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் 

உளம்பகீர் எனநடுக் குற்றேன்
இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் 

என்னுளம் நடுங்குவ தியல்பே   
3432
பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் 

பகரும்நேர் முதற்பல வயினும்
சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் 

சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை 

வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல 

வருந்தினேன் எந்தைநீ அறிவாய்   
  எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொசு,பி இரா  
3433
காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் 

கடுங்குரல் கேட்டுளங் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் 

சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் 

வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் 

ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்  
  விடத்தின் - ச மு க  
3434
வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு 

வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
சீறிய குரலோ டழுகுரல் கேட்டுத் 

தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் 

கோள்செயும் ஆடவர் மடவார்
ஊறுசெய் கொடுஞ்சொல் இவைக்கெலாம் உள்ளம் 

உயங்கினேன் மயங்கினேன் எந்தாய்   
  செறும் - பி இரா பதிப்பு 
3435
நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும் 

நிறைஉடம் பிற்சில உறுப்பும்
உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும் 

உன்னிமற் றவைகளை அந்தோ
பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று 

பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே 

நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்