3436
மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் 

மயங்கிநாம் இவரொடு முயங்கி
இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே 

இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
தங்கிய பிறர்தம் துயர்தனைக் காண்டல் 

ஆகும்அத் துயருறத் தரியேம்
பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் 

பயந்ததும் எந்தைநீ அறிவாய்  
  துயர்களை - ச மு க 
3437
வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் 

மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே
மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் 

மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ
நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே 

நடுங்குற வரும்எனப் பயந்தே
மெலிந்துடன் ஒளித்து வீதிவே றொன்றின் 

மேவினேன் எந்தைநீ அறிவாய்   
3438
களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட 

காலத்தும் உண்டகா லத்தும்
நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான் 

நேர்ந்தபல் சுபங்களில் நேயர்
அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க 

அவர்களுக் கன்பினோ டாங்கே
ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே 

பயத்தொடும் உற்றனன் எந்தாய்   
3439
இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் 

இச்சுகத் தால்இனி யாது
துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச் 

சூழ்வெறு வயிற்றொடும் இருந்தேன்
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்

ஐயகோ தெய்வமே இவற்றால்
வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து 

வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்   
  ஐயவோ - படிவேறுபாடு ஆ பா 
3440
உற்றதா ரணியில் எனக்குல குணர்ச்சி 

உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் 

பேருண வுண்டனன் சிலநாள்
உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் 

உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள 

மனநடுங் கியதுநீ அறிவாய்