3441
தொழுந்தகை உடைய சோதியே அடியேன் 

சோம்பலால் வருந்திய தோறும்
அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால் 

அளவிடற் கெய்துமோ பகலில்
விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும் 

விட்டிடா வன்மையால் தூங்கி
எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன் 

என்செய்வேன் என்செய்வேன் என்றே   
3442
அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் 

அரும்பெருஞ் சோதியே அடியேன்
சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் 

தூக்கமே கண்டனன் தூக்கம்
வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் 

மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் 

தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்  
3443
உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன் 

உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம் 

கணக்கிலே சிறிதுறும் கனவில்
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் 

எண்ணவும் எழுதவும் படுமோ
நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம் 

நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ   
3444
பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் 

தூக்கமாம் பாவிவந் திடுமே
இகலுறு கனவாம் கொடியவெம் பாவி 

எய்துமே என்செய்வோம் என்றே
உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் 

உன்னுளம் அறியுமே எந்தாய்
நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் 

நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ   
3445
தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் 

தொழிலிலே வந்தகோ பத்தில்
சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த 

தருணம்நான் கலங்கிய கலக்கம்
வகுப்புற நினது திருவுளம் அறியும் 

மற்றுஞ்சில் உயிர்களில் கோபம்
மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம் 

மெய்யநீ அறிந்ததே அன்றோ