3446
ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய 

உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் 

ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது 

புந்தியில் அறிந்ததே எந்தாய்
வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே 

வெதும்பிய நடுக்கம்நீ அறிவாய்   
  நடுக்கமும் - படிவேறுபாடு ஆ பா 
3447
கோபமே வருமோ காமமே வருமோ 

கொடியமோ கங்களே வருமோ
சாபமே அனைய தடைமதம் வருமோ 

தாமதப் பாவிவந் திடுமோ
பாபமே புரியும் லோபமே வருமோ 

பயனில்மாற் சரியம்வந் திடுமோ
தாபஆங் கார மேஉறு மோஎன் 

றையநான் தளர்ந்ததும் அறிவாய்   
3448
காமமா மதமாங் காரமா திகள்என் 

கருத்தினில் உற்றபோ தெல்லாம்
நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் 

நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
சேமமார் உலகில் காமமா திகளைச் 

செறிந்தவர் தங்களைக் கண்டே
ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் 

ஐயநின் திருவுளம் அறியும்   
3449
கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் 

காட்சியைக் கண்டபோ தெல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி 

வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் 

நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் 

படுத்ததும் ஐயநீ அறிவாய்   
3450
புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் 

புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி 

ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு 

மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த 

இளைப்பையும் ஐயநீ அறிவாய்