3456
தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் 

தடித்தஉள் ளத்தொடு களித்தே
நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே 

நல்லவா கனங்களில் ஏறி
உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே 

ஓட்டிய போதெலாம் பயந்தேன்
பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் 

பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்   
3457
சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் 

சஞ்சலம் உறும்எனப் பயந்தே
நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும் 

நண்ணியும் பிறவிடத் தலைந்தும்
பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் 

பகலன்றி இரவும்அப் படியே
மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் 

விளம்பலென் நீஅறிந் ததுவே   
3458
உருவுள மடவார் தங்களை நான்கண் 

ணுற்றபோ துளநடுக் குற்றேன்
ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் 

உவளகத் தொளித்தயல் இருந்தேன்
கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட 

காலத்தில் நான்உற்ற கலக்கம்
திருவுளம் அறியும் உரத்தசொல் எனது 

செவிபுகில் கனல்புகு வதுவே  
3459
பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் 

பராக்கிலே செலுத்திய போதும்
எண்ணிய மடவார் தங்களை விழைந்தே 

இசைந்தனு பவித்தஅப் போதும்
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் 

நவின்றசங் கீதமும் நடமும்
கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும் 

கலங்கிய கலக்கம்நீ அறிவாய்   
3460
நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது 

நண்பினர் உடுத்திய போது
பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் 

பயந்தனர் வெய்யிலிற் கவிகை
வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் 

வெருவினேன் கைத்துகில் வீசி
அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி 

அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்