3461
கையுற வீசி நடப்பதை நாணிக் 

கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் 

மெய்எலாம் ஐயகோ மறைத்தேன்
வையமேல் பிறர்தங் கோலமும் நடையும் 

வண்ணமும் அண்ணலே சிறிதும்
பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் 

பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்   
  ஐயவோ - படிவேறுபாடு ஆ பா 
3462
வைகிய நகரில் எழிலுடை மடவார் 

வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும்
சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால் 

தனித்தெனைப் பலவிசை அறிந்தும்
பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும் 

பொருள்முத லியகொடுத் திசைத்தும்
கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக் 

கடிந்ததும் இல்லைநீ அறிவாய்   
3463
எளியரை வலியார் அடித்தபோ தையோ 

என்மனம் கலங்கிய கலக்கம்
தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் 

திருவுளம் அறியுமே எந்தாய்
களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் 

கடலினும் பெரியது கண்டாய்
அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை 

அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்   
  அறியும் எந்தாயே - பி இரா பதிப்பு 
3464
இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த 

இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்
கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது 

காதிலே விழுந்தபோ தெல்லாம்
விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி 

வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்
உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண் 

டுளம்நடுக் குற்றனன் பலகால்   
  விரைவிலே - முதற்பதிப்பு, பொ சு, ச மு க, பி இரா பதிப்பு 
3465
உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ 

துள்ளகம் நடுங்கினேன் பலகால்
கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ 

தையவோ கலங்கினேன் கருத்தில்
புரத்திலே அம்மா அப்பனே ஐயோ 

எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் 

தந்தைநீ அறிந்தது தானே