3471
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் 

வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த 

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் 

நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் 

சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்  
  ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு 
3472
நலிதரு சிறிய தெய்வமென் றையோ 

நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் 

பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே 

புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் 

கண்டகா லத்திலும் பயந்தேன்   
3473
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் 

தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் 

கண்டகா லத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி 

வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் 

எந்தைநின் திருவுளம் அறியும்   
  திருவருள் - முதற் பதிப்பு, பொ சு பதிப்பு 
3474
நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை 

நண்ணிடா அரையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் 

கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் 

பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
விடுநிலை உலக நடைஎலாங் கண்டே 

வெருவினேன் வெருவினேன் எந்தாய்   
3475
ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய 

ஒருதனித் தலைவனே என்னைத்
தாங்கிய தாயே தந்தையே குருவே 

தயாநிதிக் கடவுளே நின்பால்
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் 

அவர்தமை நினைத்தபோ தெல்லாம்
தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின் 

திருவுளம் அறியுமே எந்தாய்