3476
காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் 

காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்
பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் 

பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து 

நன்குறக் களித்துக் கால்கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை 

நினைக்கவும் பயந்தனன் எந்தாய்   
3477
தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் 

சார்ந்திட முயலுறா தந்தோ
கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் 

கனிவுற வைத்தனர் ஆகிப்
புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் 

பொதுஎனக் கண்டிரங் காது
கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் 

எந்தைநான் கூறுவ தென்னே  
3478
இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங் 

கெய்திய நாளது தொடங்கி
நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த 

நடுக்கமும் துன்பமும் உரைக்க
எவ்வணத் தவர்க்கும் அலகுறா தெனில்யான் 

இசைப்பதென் இசைத்ததே அமையும்
செவ்வணத் தருணம் இதுதலை வாநின் 

திருவுளம் அறிந்ததே எல்லாம்   
  அலகுறாது - குறைவுபடாது முதற் பதிப்பு 
3479
தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் 

தம்பிரான் அல்லையோ மனத்தைக்
கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த 

கடவுள்நீ அல்லையோ எனைத்தான்
இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும் 

எந்தைநீ அல்லையோ நின்பால்
உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் 

நீஅறி யாததொன் றுண்டோ    
3480
கைதலத் தோங்கும் கனியின் என் னுள்ளே 

கனிந்தஎன் களைகண்நீ அலையோ
மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா 

மெய்யன்நீ அல்லையோ எனது
பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ 

பரிந்துநின் திருமுன்விண் ணப்பம்
செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் 

திருவுளம் தெரிந்ததே எல்லாம்  
  கனியில் - பி இரா பதிப்பு
 அறிந்ததே - முதற்பதிப்பு, பொ சு, ச மு க பதிப்பு