3486
தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே 

தெய்வமே தெய்வமே எனநின்
சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் 

தந்தையும் குருவும்நீ என்றேன்
பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் 

பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் 

இன்றுநான் உரைப்பதிங் கென்னே   
3487
பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை 

புரிந்தது போலவே இன்றும்
செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத் 

தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும்
நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும் 

நேயமும் நீஎனப் பெற்றே
குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக் 

குதித்ததென் கூறுக நீயே   
3488
பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை 

பணிபுரிந் தாங்கிது வரையில்
புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும் 

பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும்
விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும் 

மெய்ம்மையும் யாவும்நீ என்றே
தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த 

செய்கைஎன் செப்புக நீயே   
3489
மைதவழ் விழிஎன் அம்மைஓர் புடைகொள் 

வள்ளலே நின்னைஅன் பாலும்
வைதவர் தமைநான் மதித்திலேன் அன்பால் 

வாழ்த்துகின் றோர்தமை வாழ்த்தி
உய்தவர் இவர்என் றுறுகின்றேன் அல்லால் 

உன்அருள் அறியநான் வேறு
செய்ததொன் றிலையே செய்தனன் எனினும் 

திருவுளத் தடைத்திடல் அழகோ  
3490
ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் 

ஆகமம் உரைவரைப் பெல்லாம்
காரண நினது திருவருட் செங்கோல் 

கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
நாரணர் முதலோர் போற்றிட விளங்கி 

நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
தாரணி யிடைஇத் துன்பமா திகளால் 

தனையனேன் தளருதல் அழகோ