3491
பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் 

பாலும்அப் பாலும்அப் பாலும்
ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல் 

உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில் 

சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
வார்கடல் உலகில் அச்சமா திகளால் 

மகன்மனம் வருந்துதல் அழகோ  
3492
ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந் 

தப்பதி வரையும்அப் பாலும்
தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல் 

செல்லஓர் சிற்சபை இடத்தே
சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும் 

தந்தையே தனிப்பெருந் தலைவா
பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே 

பிள்ளைநான் வருந்துதல் அழகோ  
3493
சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் 

திருச்சபை தன்னிலே திகழும்
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் 

தழைத்திடத் தனிஅருட் செங்கோல்
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் 

தனிமுதல் தந்தையே தலைவா
பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே 

பிள்ளைநான் வாடுதல் அழகோ  
3494
சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும் 

தனித்தனி அவற்றுளே நிரம்பித்
தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும் 

சோதியால் விளக்கிஆ னந்த
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் 

அரும்பெருந் தந்தையே இன்பப்
பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே 

பிள்ளைநான் பேதுறல் அழகோ  
3495
சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் 

திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும் 

பெருவெளி யாய்அதற் கப்பால்
நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் 

நீதிநல் தந்தையே இனிமேல்
பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் 

பிள்ளைநான் வாடுதல் அழகோ