3496
எண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம் 

இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல்
நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே 

நடத்தும்ஓர் ஞானநா யகனே
தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில் 

தனையன்நான் பயத்தினால் துயரால்
அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் 

ஐயகோ வாடுதல் அழகோ   
3497
கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில் 

காண்கின்ற காட்சிகள் எல்லாம்
நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய் 

நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில்
மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல் 

வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத்
தலைவனே எனது தந்தையே நினது 

தனையன்நான் தளருதல் அழகோ   
3498
ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் 

வடைவெலாம் இன்றிஒன் றான
சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே 

தூயபே ரருள்தனிச் செங்கோல்
நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை 

நிருத்தனே ஒருத்தனே நின்னை
ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே 

உறுகணால் தளருதல் அழகோ  
3499
அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே 

அரும்பெருஞ் சோதியே அடியார்
பித்தனே எனினும் பேயனே எனினும் 

பெரிதருள் புரிதனித் தலைமைச்
சித்தனே எல்லாம் செய்திட வல்ல 

செல்வனே சிறப்பனே சிவனே
சுத்தனே நினது தனையன்நான் மயங்கித் 

துயர்ந்துளம் வாடுதல் அழகோ  
3500
உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

ஒருதனித் தந்தையே நின்பால்
குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம் 

குயிற்றினேன் என்னில்அக் குற்றம்
இற்றென அறிவித் தறிவுதந் தென்னை 

இன்புறப் பயிற்றுதல் வேண்டும்
மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை 

வழக்கிது நீஅறி யாயோ