3501
குற்றமோ குணமோ நான்அறி யேன்என் 

குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே
உற்றதா தலினால் உலகியல் வழக்கில் 

உற்றன மற்றென தலவே
தெற்றென அருட்கே குற்றம்என் பதுநான் 

செய்திடில் திருத்தலே அன்றி
மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை 

மரபிது நீஅறி யாயோ  
  உற்றிடின் - முதற்பதிப்பு; பொ சு, ச மு க பதிப்பு
 தெற்றென - விரைந்து முதற்பதிப்பு 
3502
மாயையால் வினையால் அரிபிர மாதி 

வானவர் மனமதி மயங்கித்
தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ 

சிறியனேன் செய்வது புதிதோ
ஆயினும் தீய இவைஎன அறியேன் 

அறிவித்துத் திருத்துதல் அன்றி
நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை 

நெறிக்கழ கல்லவே எந்தாய்  
3503
கருணையும் சிவமே பொருள்எனக் காணும் 

காட்சியும் பெறுகமற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த 

வண்ணமே பெற்றிருக் கின்றேன்
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் 

எய்திய தென்செய்வேன் எந்தாய்
தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் 

சிறுநெறி பிடித்ததொன் றிலையே  
3504
கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் 

கருணையங் கடவுளே நின்பால்
இலங்கிய நேயம் விலங்கிய திலையே 

எந்தைநின் உளம்அறி யாதோ
மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் 

மாயையால் வரும்பிழை எல்லாம்
அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ 

டடிக்கடி அறைந்தனன் ஆண்டே   
3505
இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும் 

என்பிழை அன்றெனப் பலகால்
விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் 

வேறுநான் செய்ததிங் கென்னே
அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே 

அப்பனே என்றிருக் கின்றேன்
துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது 

தூயதாம் திருவுளம் அறியும்