3506
வருமுயிர் இரக்கம் பற்றியே உலக 

வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் 

விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான் 

ஒன்றதே இரண்டிலை இரக்கம்
ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் 

தொருவனே நின்பதத் தாணை   
3507
தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் 

தலைவனே இன்றும்என் உளமும்
மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக 

வழக்கிலே உயிர்இரக் கத்தால்
இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம் 

என்னுயிர் என்னவே றிலையே
நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும் 

நீங்கும்நின் திருவுளம் அறியும்  
3508
ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் 

ஆடலே அன்றிஓர் விடயக்
காதலால் ஆடல் கருதிலேன் விடயக் 

கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்
போதலால் சிறிய போதும்உண் டதுநின் 

புந்தியில் அறிந்தது தானே
ஈதலால் வேறோர் தீதென திடத்தே 

இல்லைநான் இசைப்பதென் எந்தாய்   
3509
என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் 

இருக்கவே இசைவித் திவ்வுலகில்
மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை 

வள்ளல்நீ நினக்கிது விடயம்
பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் 

பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா 

திருந்ததோர் இறையும்இங் கிலையே   
3510
உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில் 

ஓடியும் ஆடியும் உழன்றும்
சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார் 

சிறியனேன் ஒருதின மேனும்
மறுகிநின் றாடி ஆர்த்ததிங் குண்டோ 

நின்பணி மதிப்பலால் எனக்குச்
சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின் 

திருவுளம் அறியுமே எந்தாய்