3511
தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில் 

சழக்குரை யாடிவெங் காமச்
சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ 

சிறியனேன் ஒருதின மேனும்
எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட் 

டிவ்வுல கியலில்அவ் வாறு
தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ 

திருவுளம் அறியநான் அறியேன்   
3512
அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப 

அடிக்கடி அயலவர் உடனே
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் 

வள்ளலே நின்பணி விடுத்தே
இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும் 

ஏழையேன் பிறரொடு வெகுண்டே
வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ 

மெய்யநின் ஆணைநான் அறியேன்   
3513
வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப 

மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே
கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் 

கடைதொறும் மயங்குதல் பொய்யே
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் 

மெய்யநின் திருப்பணி விடுத்தே
எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ 

எந்தைநின் ஆணைநான் அறியேன்  
3514
மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த 

வள்ளலே உலகினில் பெற்றோர்
குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக் 

கொடியதீ நெறியிலே மக்கள்
புலைகொலை களவே புரிகின்றார் அடியேன் 

புண்ணிய நின்பணி விடுத்தே
உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ 

உண்பதத் தாணைநான் அறியேன்   
3515
தனிப்பெருஞ் சோதித் தந்தையே உலகில் 

தந்தையர் பற்பல காலும்
இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட் 

கேற்கவே பயிற்றிடுந் தோறும்
பனிப்புற ஓடிப் பதுங்கிடு கின்றார் 

பண்பனே என்னைநீ பயிற்றத்
தினைத்தனை யேனும் பதுங்கிய துண்டோ 

திருவுளம் அறியநான் அறியேன்