3516
தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில் 

தந்தையர் தங்களை அழைத்தே
சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம் 

சூழலே போகின்றார் அடியேன்
என்னைநீ உணர்த்தல் யாதது மலையின் 

இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால்
பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோ 

பெரியநின் ஆணைநான் அறியேன்   
3517
போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் 

பொருந்துதம் தந்தையர் தமையே
வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா 

மெல்லிய சரிகைவத் திரந்தா
ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே 

இரங்குவார் இவைகுறித் தடியேன்
தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ 

திருவுளம் அறியநான் அறியேன்   
3518
குணம்புரி எனது தந்தையே உலகில் 

கூடிய மக்கள்தந் தையரைப்
பணம்புரி காணி பூமிகள் புரிநற் 

பதிபுரி ஏற்றபெண் பார்த்தே
மணம்புரி எனவே வருத்துகின் றார்என் 

மனத்திலே ஒருசிறி தேனும்
எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ 

எந்தைநின் ஆணைநான் அறியேன்   
3519
இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே 

என்னுயிர்த் தந்தையே இந்தச்
சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே 

தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி
அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார் 

ஐயவோ வஞ்சம்நின் அளவில்
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ 

முதல்வநின் ஆணைநான் அறியேன்   
3520
தன்மைகாண் பரிய தலைவனே எனது 

தந்தையே சகத்திலே மக்கள்
வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை 

வைகின்றார் வள்ளலே மருந்தே
என்மனக் கனிவே என்னிரு கண்ணே 

என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே
நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ 

நின்பதத் தாணைநான் அறியேன்