3521
ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில் 

உற்றிடு மக்கள்தந் தையரை
வைப்பில்வே றொருவர் வைதிடக் கேட்டு 

மனம்பொறுத் திருக்கின்றார் அடியேன்
தப்பிலாய் நினைவே றுரைத்திடக் கேட்டால் 

தரிப்பனோ தரித்திடேன் அன்றி
வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய் 

விளையுமோ அறிந்திலேன் எந்தாய்   
  தப்பிலா - முதற்பதிப்பு, பொசு, ச மு க பதிப்பு 
3522
இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் 

எந்தைநின் திருப்பணி விடுத்தே
சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான் 

தெரிந்தநாள் முதல்இது வரையும்
அத்தனே அரசே ஐயனே அமுதே 

அப்பனே அம்பலத் தாடும்
சித்தனே சிவனே என்றென துளத்தே 

சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்   
3523
பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய் 

பொய்யுல காசைசற் றறியேன்
நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே 

நண்ணிய மெய்ப்பொருள் நமது
கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான் 

கருதினேன் கருத்தினை முடிக்கச்
செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ 

தெய்வமே என்றிருக் கின்றேன்   
3524
அன்னையே என்றன் அப்பனே திருச்சிற் 

றம்பலத் தமுதனே எனநான்
உன்னையே கருதி உன்பணி புரிந்திங் 

குலகிலே கருணைஎன் பதுதான்
என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி 

இருக்கின்றேன் என்உள மெலிவும்
மன்னும்என் உடம்பின் மெலிவும்நான் இருக்கும் 

வண்ணமும் திருவுளம் அறியும்   
3525
பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய் 

புண்ணியா கண்ணினுள் மணியே
கைபடாக் கனலே கறைபடா மதியே 

கணிப்பருங் கருணையங் கடலே
தெய்வமே எனநான் நின்னையே கருதித் 

திருப்பணி புரிந்திருக் கின்றேன்
மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும் 

வண்ணமும் திருவுளம் அறியும்