3526
தன்னிகர் அறியாத் தலைவனே தாயே 

தந்தையே தாங்குநற் றுணையே
என்னிறு கண்ணே என்னுயிர்க் குயிரே 

என்னுடை எய்ப்பினில் வைப்பே
உன்னுதற் கினிய வொருவனே எனநான் 

உன்னையே நினைத்திருக் கின்றேன்
மன்னும்என் உள்ள மெலிவும்நான் இருக்கும் 

வண்ணமும் திருவுளம் அறியும்   
3527
திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள் 

செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்
உருவளர் திருமந் திரத்திரு முறையால் 

உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்
கருவளர் அடியேன் உளத்திலே நின்று 

காட்டிய மெய்ம்மொழிப் பொருளும்
மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும் 

வண்ணமும் திருவுளம் அறியும்   
3528
உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம் 

உறுமலை இலக்கென நம்பி
நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப 

நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே 

பற்பல குறிகளால் அறிந்தே
சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள் 

திகைப்பதும் திருவுளம் அறியும்   
3529
ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி 

ஏகவும் ஏகவும் நுணுகித்
தேய்ந்தபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் 

தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை
வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே 

மனங்களிப் புற்றுமெய் இன்பம்
தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் 

சுழல்வதும் திருவுளம் அறியும்   
3530
வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது 

வாட்டமும் மாயையா திகளின்
ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி 

என்னைஓர் பொருள்என மதித்தே
தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள் 

செலுத்திய திருச்சிலம் பொலிநான்
கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள் 

கிலேசமுந் திருவுளம் அறியும்