3531
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என் 

காதிலே கிடைத்தபோ தெல்லாம்
மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம் 

மரபினர் உறவினர் தமக்குள்
உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி 

ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும்
எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த 

ஏக்கமுந் திருவுளம் அறியும்   
3532
கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம் 

கருத்திலே கலந்ததௌ; ளமுதம்
மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல 

வள்ளல்சிற் றம்பலம் மன்னும்
பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த 

புண்ணியம் வருகின்ற தருணம்
தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் 

தன்மையும் திருவுளம் அறியும்   
3533
இமையவர் பிரமர் நாரணர் முதலோர் 

எய்துதற் கரியபே ரின்பம்
தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் 

தயாநிதி தனிப்பெருந் தந்தை
அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில் 

ஐயர் தாம் வருகின்ற சமயம்
சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் 

தன்மையும் திருவுளம் அறியும்  
3534
அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் 

அமுதநின் மேல்வைத்த காதல்
நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் 

நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
படியஎன் தன்னால் சொலமுடி யாது 

பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் 

திருவுளங் கண்டதே எந்தாய்  
3535
பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப் 

பகல்வரை அடைந்தவை எல்லாம்
உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால் 

ஒருசில உரைத்தனன் எனினும்
என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும் 

இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும்நீ அறிந்த 

வண்ணமே வகுப்பதென் நினக்கே